தந்தை ரோவர் கல்விக் குழுமம் கிறிஸ்துமஸ் பெருவிழா தந்தை ரோவர் கல்விக் குழுமத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழா 22.12.2023 அன்று ரோவர் கல்விக் குழுமத் தேவாலய அரங்கில் மாலை 5.00 மணி அளவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் நாவரசர் இனியவன் அவர்கள் கலந்து கொண்டு 'மகிழ்வித்து மகிழ்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அவர் தனது சிறப்புரையில், உண்மையான மகிழ்ச்சி என்பது குழந்தைகளிடமிருந்து பிறக்கிறது. மகிழ்வித்து மகிழ்வது மனிதனின் மற்றொரு பரிமாணம் அதை கல்வி மூலமே கொடுக்க முடியும். அதை ரோவர் கல்வி நிறுவனம் மிகச் சிறப்பாக செய்து வருகிறது என்பதை தெரிவித்ததோடு ,தனது வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளை நகைச்சுவை கலந்த உணர்வோடு பகிர்ந்து கொண்டார். வரவேற்புரையை ரோவர் கல்விக் குழுமத்தின் துணைத் தாளாளர் திரு. ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் வழங்கினார். அவர் தனது வரவேற்புரையில், ரோவர் கல்விக் குழுமத்தின் எதிர்கால திட்டங்களையும் இதுவரை செயல்படுத்திக் கொண்டு வந்திருக்கின்ற திட்டங்களையும் பெருமையோடு பகிர்ந்து கொண்டார். நீட் தேர்விற்கு தனியாகப் பயிற்சி கொடுப்பதையும், மாணவர்களுக்கான ரோவர் கல்விக் குழுமத்தின் உதவித்தொகைப் பற்றியும் பெருமையோடு பகிர்ந்து கொண்டார். பெருவிழாவிற்கு ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கி. வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் அறங்காவலர் திருமதி மகாலட்சுமி வரதராஜன் அவர்களும்,பிற அறங்காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் தொடக்கமாக கிறிஸ்துமஸ் குடில் திறக்கப்பட்டு,ரோவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் பாடல் மற்றும் நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. நன்றியுரையை தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ம. அகதா அவர்கள் வழங்கினார். ரோவர் கல்விக்குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ரோவர் குழுமத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.சக்தீஸ்வரன் அவர்களும்,அலுவலக மேலாளர் திரு.ஆனந்தன் அவர்களும் மற்றும் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்களும் செய்திருந்தனர்