தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி – பெரம்பலூர் விளையாட்டு விழா - 2024 தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியின் விளையாட்டு விழா 24.01.2024 அன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாக மைதானத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு இந்திய அணியின் புகழ்மிக்க கிரிக்கெட் வீரர் திரு.T. நடராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.அவர் தனது சிறப்புரையில் ,'ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்திருந்தாலும் என்னால் சாதிக்க முடிந்தது. உங்களுக்கு வாய்ப்புமிக்க பின்புலம் கிடைத்திருக்கிறது. கொரோனா காலத்தில் கூட நான் உடற்பயிற்சியை நிறுத்தவில்லை. ஜெயப்பிரகாஷ் அவர்கள்தான் என் முன்னோடி. என் நலம் விரும்பி. அவரை இந்த நல்ல நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். உங்களை நீங்கள் தான் நம்ப வேண்டும். எந்த துறையிலும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். என்னுடைய வெற்றியின் ரகசியம் நல்ல நண்பர்களை நான் பெற்றதே. தன்னம்பிக்கையே மிகப்பெரிய ஆயுதம். எவ்வளவு பெரிய உயரம் சென்றாலும் கடந்து வந்த பாதையை நாம் என்றும் மறந்து விடக்கூடாது. வெற்றியை ஊக்குவிப்பதே உற்சாகத்தை தரும். எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள் அதுவே மிகப்பெரிய வெற்றியை தரும் என்று அறிவுரை நல்கியதோடு பரிசு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகளை தெரிவித்தார். ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் தலைமையுரை நல்கினார்.அவர் தனது தலைமையுரையில், விளையாட்டு வீரர் ஆவது என்பது வாழ்வின் மிகச்சிறந்த குறிக்கோள். அந்த குறிக்கோளை நிதமும் நினைத்திருந்தால் மட்டுமே அடைய முடியும். குறிக்கோளை நோக்கி நாளும் தொடர்ந்து முன்னேறிய ஒரு மனிதரே இன்றைய சிறப்பு விருந்தினர் .அவரைப் போல் மாணவர்களும் தங்களது வாழ்நாளில் அடுத்தடுத்து செய்ய வேண்டுவனவற்றை கனவு காண வேண்டும். அந்த கனவே பின்னாளில் மெய்யான நனவாகும் என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும்,துணை தாளாளர் திரு.ஜான் அசோக் வரதராஜன், அறங்காவலர் திருமதி மகாலட்சுமி வரதராஜன்,கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி,துணை முதல்வர் முனைவர் திரு.S.சிவகுமார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். உடல்கல்வித்துறைத்தலைவர் முனைவர் திரு.ஜெ.கண்ணன் அவர்களால் ஆண்டறிக்கை வழங்கப்பட்டது. தொடக்க விழாவின் முதல் நிகழ்வாக கொடியேற்றம் நடைபெற்றது. தேசியக்கொடி, ஒலிம்பிக் கொடி,கல்லூரிக்கொடி ஆகிய மூன்று கொடிகளும் சிறப்பு விருந்தினர்களால் ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டன.அதன்பின்னர் மாணவர்களின் கண்கவரும் அணிவகுப்பு மரியாதை நிகழ்த்தப்பட்டது. அடுத்ததாக,தெற்காசிய அளவிலும்,இந்திய அளவிலும்,தமிழ்நாடு மற்றும் பல்கலைக்கழக அளவிலும் பல்வேறு பதக்கங்களை வென்ற உடற்கல்வியியல் துறையைச் சேர்ந்த மாணவர்களாலும், பிற துறை மாணவர்களாலும் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு ,மைதானம் முழுக்க வலம்வரப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் உறுதிமொழி எடுக்கப்பட்டது.அதன்பிறகு முறைப்படி சிறப்பு விருந்தினர் அவர்களால் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. நிறைவு விழா 12.00 மணியளவில் தொடங்கியது.பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும்,பேராசிரியர்களுக்கும் பதக்கங்களும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.துணை முதல்வர் திரு. S.சிவகுமார் அவர்கள் நன்றி நல்கினார்.ஆங்கிலத்துறைப் பேராசிரியர் தமிழ் ரோஜா அவர்களும், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் ப.செந்தில் நாதன் மற்றும் முனைவர் த.மகேஸ்வரி அவர்களும் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினர்.