தந்தை ஹேன்ஸ் ரோவர் (தன்னாட்சி) கல்லூரி - பெரம்பலூர் முதலாமாண்டு மாணவர் வரவேற்பு விழா தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டின் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா 13.07.2023 அன்று காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் சிறப்புடன் நடைபெற்றது.இவ்விழாவில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர் . இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் தன்னம்பிக்கை உரையாளருமான திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது சிறப்புரையில், 'உங்களது வாழ்வில் நண்பர்கள், ஆசிரியர்கள், தந்தை, தாய் ஆகிய நால்வரை என்றுமே நீங்கள் மறக்கக்கூடாது. கல்லூரி நட்பு நீங்கள் எந்த உயரத்திற்கு சென்றாலும் இறுதிவரை அதுவே தோள் கொடுக்கும்.யாராலும் ஒப்பிட்டு பார்க்க இயலாத ஒரே இனம் ஆசிரியர்கள் தான்.வாழ்வின் பயணத்தில் வலிகளை சுமந்துகொண்டு பூக்களை மட்டுமே உங்களுக்கு பரிசளித்தவர்கள் தாய் தந்தையர் என்பதை வலியுறுத்தி கூறினார். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.தங்களுக்கான குறிக்கோளை ஒருவித சுதந்திரத்துடன் அவர்களால் அடைய முடியும் என்றதோடு பல்வேறு அறிஞர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டி மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார். இவ்விழாவிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் துணைத் தாளாளர் திரு ஜான் அசோக் வரதராஜன் அவர்கள் தலைமைத் தாங்கி திருவிளக்கு ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். அவர் தனது தலைமையுரையில் ,'பள்ளிக் கல்வி முடிந்து கல்லூரியில் இணைந்த பிறகே மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.பாடல்,நடனம்,விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை கல்லூரியே கண்டறிந்து வாய்ப்பு நல்கும் என்றும் மாணவர்கள் தங்களது மொழி சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கல்லூரியின் திறமையான முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றனர். அவர்களை முன் மாதிரியாக கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்நிகழ்வில் ரோவர் கல்விக்குழுமங்களின் தாளாளர் டாக்டர் கி.வரதராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.துணை முதல்வரும்,அறிவியல் புல முதன்மையருமான முனைவர் S. சிவக்குமார் அவர்கள் நன்றி நல்கினார்.கலையியல் புல முதன்மையர் முனைவர் பிரியா அவர்களும் கலந்துக்கொண்டார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சே.சுரேஷ்,முனைவர் த.மகேஸ்வரி, முனைவர் ப.செந்தில்நாதன்,ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் செல்வி தமிழ்ரோஜா ஆகியோர் நிகழ்வைத் தொகுத்து வழங்கினர்.வேத வாசிப்பினை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சுமதி பிராங்க்ளின் அவர்கள் நிகழ்த்தினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைத் துறைத்தலைவர்களும்,பேராசிரியப் பெருமக்களும்,அலுவலக மேலாளர் திரு பிரேம்குமார் அவர்களும் செய்திருந்தனர்.